மட்டிக்களி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்களி அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் பங்குனி உத்தர திருச்சடங்கு நேற்று (22)மாலை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மட்டிக்களில் பலநூற்றாண்டு காலமாக ஆட்சிசெய்துவரும் அருள்மிகு திரௌபதாதேவி ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது தமிழர்களின் பாரம்பரிய மரபுகளைக்கொண்டதாக கடந்த 15ஆம் திகதிவெள்ளிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

கிராமிய வழிபாட்டு முறைகளைக்கொண்ட சடங்கு முறையில் இடம்பெற்றுவரும் ஆலய திருச்சடங்கானது ஏழு தினங்கள் நடைபெற்றது.

கடந்தசனிக்கிழமை மாலை அம்பாளின் வாடை அரைத்தல் திருச்சடங்கு நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பண்டாரம் அரைத்தல் சடங்கும் செவ்வாய்க்கிழமை மாலை அம்பாளின் கல்யாணக்கால் வெட்டும் சடங்கும்,புதன்கிழமை வனவாசம் நிகழ்வு கன்னிமார் தெரிதலும் நெல்லுக்குற்றல் சடங்கும் நடைபெற்றது.

வியாழக்கிழமை மாலை அம்பாளின் தவநிலைச்சடங்கு சிறப்பாக முறையில் நடைபெற்று அன்று இரவு விநாயகப்பாணை எழுந்தருளல் நிகழ்வும் நடைபெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று திரௌபதாதேவி பஞ்சபாண்டவர்களுடன் மஞ்சலி குளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வாவியில் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்ததும் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பில் பஞ்சபாண்டவர்களுடன் ஆலய வழக்கத்தின் அடிப்படையிலும் நேர்கடன்களை செலுத்துபவர்களும் தீமிதிப்பில் கலந்துகொண்டதை தொடர்ந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.