தென்இந்திய திரைப்படங்களில் மயூரனின் கவிதைகள் இடம்பிடிக்கும்.







கவிஞர் தணிகாசலம் பற்றி இன்னும் விரிவாக கூறமுடியுமா?

மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த ஓர் முதிர் கவிஞர் . கவிஞர் தணிகாசலம் அப்பா பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் சிறுவயதில் நான் இல்லத்தில் படிக்கும்போது எனது திறமையைக் கண்டு ஊக்கப் படுத்திய எனது ஆசான் கிழக்கில் கலைத்துறையில் இவரது பங்களிப்பு  பெரும் பங்கு பெறுகின்றன.

வானொலி தொலைக்காட்சி எதிலுமே உங்களது படைப்புக்கள் வெளிவரவில்லையா?

இல்லை
சில வலைத் தளங்களில் மாத்திரமே.

உங்களது படைப்புக்களில் இலங்கை அரசியல் தொடர்பாகவும் பிரதிபலிப்புக்கள் உள்ளது?

சுயநலம் அற்ற அரசியல் தலைமைகளை தேர்வு செய்து சிறந்த அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலைப் பொதுமகனாக நானும் விரும்புகிறேன்.

உங்களது வாழ்வில் நடந்த சுவாரஸ்யம் உள்ள மறக்கமுடியாத  விடயம் ஒன்று? 

இதற்கு என் வாழ்வில் நடந்த சிறு நகைச்சுவைக் கதை அப்பா இறக்குமுன் அப்போது எனக்கு 10 வயது இருக்கும் என நினைக்கிறேன்,  மாலை நேரம் வீட்டில் அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தார்கள் நானும் என் பாட்டில் எனது வேலையில் இருந்தேன் (ஈர்க்குத்தடி கொண்டு வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் வேலை)
அப்படி நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் தேங்காய் பறிக்கும் துரட்டி ( நுனியில் தேங்காயைப் பறிப்பதற்கு ஏற்றவாறு கொழு வடிவம் கொண்ட கத்தி கட்டிய நீளமான மூங்கில்)
எனது கண்ணில் பட்டது அதனை எடுத்துப் பார்த்த எனக்கு விளையாட்டுப் பிஞ்சு  மூளை என்ன நினைத்ததோ அதிலே தீப்பந்தத்தைக் கட்டி தென்னை மரத்தில் தொங்கியிருந்த பன்னாடைகளை எரிப்போம் எனத் தோன்றியது,  தாமதிக்காமல் செயற்படுத்தினேன் பாழாய்ப் போன பன்னாடை அதோடு முடித்துக் கொள்ளாமல் மொத்தத் தென்ன மர வட்டையும் எரிக்க அப்பாவின் கையால் எனக்கு  கிடைத்த அபிஷேகம்,
அழுது திரிந்த நாள் இப்போதும் நிழலாடுகின்றது.  இதனை நினைவு படுத்தியமைக்கு நன்றி .


 உங்களது கவிதைகள் அதிகம் பாலியல்கால பருவ நினைவுகளை புடம் போடுகின்றது? 
உங்களை கவிபாடும் நிலைக்கு உந்தியது எது?.

ஆம்
எனது கவிதையில் கற்பனை அதிகம் இல்லையென்றும் அவை உண்மைத் தன்மை வாய்ந்ததாகவுமே இருக்கின்றது என எனது நட்பு வட்டாரத்தில் பலரும் கூறுகின்றார்கள். 

நாம் கடந்து வந்த இனிப்பான நொடிகளைக் கவிதையில் புத்துருவாக்கம் செய்வதன் மூலம் நமது பால்ய காலத்திற்குப் பயணம் செய்து பார்த்த சந்தோஷம் கிடைப்பதால் பால்ய கால நினைவுகளை அதிகம் விரும்பி எழுதுகின்றேன்.

உங்களது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்ய முனைப்பில்லையா?

இருக்கின்றது
நான் தற்போது தாய்நாட்டில் இல்லாத காரணத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை நாடு திரும்பியதும் செயற்படுத்துவேன்.

மயூரன்  மேலும் ஏதாவது எமது மட்டு செய்திகள் வாசகர்களுக்காக குறிப்பிட விரும்புகிறீர்களா ?

சமுக நலனோடு அனைவரும் ஒற்றுமையாக வாழத்  தூண்டும் நல்ல படைப்பாளிகளை இனம் கண்டு வெளியுலகத்திற்கு காட்டும்படி தங்கள் வலைத்தளத்தை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி மயூரன்,
நிச்சயமாக பணி தொடரும்.


நன்றி உங்களது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் எமது வாசகர்களுக்காக நேரத்தை கொடுத்தமைக்கு,  தொடர்ந்து உங்களது படைப்புக்கள் காத்திரமானதாக வெளிவரவேண்டும் எமது மண்ணின் இளம் கவிஞனான நீங்கள் தென்இந்திய திரைப்படங்களில் இடம்பிடித்து சிகரம்  தொட வேண்டும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.















நேர்காணல் : - சசி துறையூர்