சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்வு ஓவியப் போட்டி

சுற்றுச்சூழல் மாசடைவதைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கோடு, ஜப்பான் மற்றும் இலங்கை மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற ஓவியப் போட்டியானது (01.03.2019) இன்று நகர மண்டபத்தில் இடம்பெற்றது. 

ஜப்பான் நாட்டின் கல்வி கலாசார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின்  அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை  மற்றும்  ஜெய்கா நிறுவனம் என்பவற்றின் இணைந்த ஒழுங்கமைப்பில்  நடைமுறைப்படுத்தப்பட்ட சர்வதேச  உள்ளக கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் “ஜப்பான் ஆர்ட் மெயில்” எனும் தொணிப்பொருளில் இவ் ஓவியப் போட்டியானது இடம்பெற்றது.

ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வதியும் மக்கள் சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பாகவும், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும், இவ்வாறான மாசடைதலில் இருந்து எதிர்காலத்தில் தாம் வாழும் சூழலை பாதுகாப்பது தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் இப் போட்டியானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இதில் இலங்கையில் நடாத்தப்பட்ட போட்டியில், தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் ஒன்றாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்களும் அதேபோன்று ஜப்பான் நாட்டு பாடசாலை மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். 

குறிப்பாக காடுகளை அழித்தல், கழிவு நீரை நேராக நீர்நிலைகளுள் விடுதல், இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் இருநாட்டு மாணவர்களின் ஆக்கங்களும் அமைந்திருந்தன. 

குறித்த ஓவியப் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்களுக்கும் அது தொடர்பாக அதிக அக்கறையுடன் செயற்பட்ட ஆதிபர், ஆசிரியர்களுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் திரு.கந்தசாமி சத்தியசீலன், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் ஜெய்க்கா தொண்டு நிறுவனத்தின் தொண்டர் பணியாளர் செல்வி. சத்தோமி வடா ஆகியோர் பங்குகொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

இவ்வாறு வரையப்பட்ட இவ் விழிப்புணர்வு ஓவியங்கள் அனைத்தும் 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிப்பிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.