மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்

இலங்கையில் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைசெய்யப்படவேண்டும் எனவும் அவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையூடாக தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லுமாறு கோரியும் மட்டக்கப்பில் பாரிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

வடகிழக்கில் இருந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக மட்டக்களப்பு நகரின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டது.

வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான காணாமல்போன உறவுகள் கலந்துகொண்டதுடன் மதத்தலைவர்கள்,அரசியல் கட்சிகள்,பல்கலைகக்கழக மாணவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

கல்லடி பாலத்தில் ஆரம்பமான இந்த போராட்டம் காரணமாக கல்லடி பாலத்தின் ஊடான பிரதான போக்குவரத்துகள் சுமார் ஒரு மணி நேரம் ஸ்தம்பிக்கும் நிலையேற்பட்டது.

கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான பேரணியானது புகையிரத சந்தி ஊடாக தாண்டவன்வெளி சந்தியை அடைந்து திருமலை வீதியூடாக மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றது.

காந்திபூங்காவினை பேரணியடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்காதே,சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையினை நிறுத்து,காணாமல்போன உறவுகளை மீட்டுத்தா,காணாமல்போனோர் அலுவலகம் தேவையில்லை போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீருடன் காணாமல்போன உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு ஈடுபட்டதுடன் சர்வதேச சமூகம் தமது கோரிக்கையினையேற்று நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காணாமல்போனவர்களின் போராட்டம் இன்று தமிழ் மக்களின் போராட்டமாக மாற்றம்பெற்றுள்ளதாகவும் இது தீர்க்கப்படாவிட்டால் இது தமிழர் பகுதிகளில் பாரிய போராட்டமாக வெடிக்கும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம் இன்று கிழக்கிலும் வெடித்துள்ளதாகவும் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போன உறவுகள் மேற்கொள்ளும் போராட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே இருந்துவருவதாகவும் இதற்கான பலனை சர்வதேசம் அவர்களுக்கு வழங்கும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டன.

எமது பிள்ளைகளை எங்களிடம் இருந்து பெற்றுச்சென்றவர்கள் அவர்கள் எங்கிருக்கின்றார்கள்,அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எங்களுக்கு சொல்லவேண்டும்,அவ்வாறு சொல்லும் வரையில் எங்களது உயிர் இருக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இங்கு தெரிவித்தனர்.

தமது பிள்ளைகளை கடத்தி காணாமல்ஆக்கிய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அமைச்சுப்பதவிகளையும்முதலமைச்சு பதவிகளையும் வழங்கியவர்கள் தமது பிள்ளையினை ஒருபோதும் கண்டுபிடித்து தரமாட்டார்கள் அவர்கள் குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டுவருவதாகவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளும் அரசாங்கத்திடம் இருந்து தாங்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்கமுடியாது என தெரிவித்துள்ள வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைசெய்யப்படவேண்டும் எனவும் அவர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையூடாக தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.