முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் பாடசாலையினை மூடி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இன்று பாடசாலை கதவினை மூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

நேற்று முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோட்டமட்ட விளையாட்டு போட்டியின் போது முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்கள் ஐந்து பேர் குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்க கோரியே மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கு!,மாகாண கல்வி பணிப்பாளரே சரியான தீர்வினை தா,மாணவர்களை தாக்கிய குண்டர்களை கைது செய் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் வாயிலை மூடி மாணவர்கள் பெற்றோர் இந்த போராட்டத்தினை நடாத்தியதன் காரணமாக பாடசாலைக்கு வந்த ஆசிரியர்கள் வீதிகளில் தரித்துநின்றதை காணமுடிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மேற்கு வலய உதவி கல்வி பணிப்பாளர்களா எம்.மகேந்திரன், ஹரிகரன்,கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்துல் வஹாப் ஆகியோர் வருகைதந்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள்.

இதன்போது தாக்குதல் நடாத்தியவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள்,இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து மாணவர்கள் தமது போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

குறித்த தாக்குதலை வன்மையாக கண்டித்தமட்டக்களப்பு மேற்கு வலய உதவி கல்வி பணிப்பாளர் எம்.மகேந்திரன்,இனிவரும் காலங்களில் இவ்வாறான விளையாட்டு போட்டிகள் இவ்வாறான பகுதிகளில் நடாத்தப்படாது என தெரிவித்தார்.