மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடில்லா பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் -அமைச்சர் சஜீத் பிரேமதாச

இலங்கையில் உள்ள வீடில்லா பிரச்சினையினை முழுமையாக தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டினையும் அபிவிருத்திப்பாதையின் ஊடாக கட்டியெழுப்பும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதன்ஒரு கட்டமாக நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு 332 பிரதேச செயலக பிரிவுகளிலும் தகவல் தொழில்நுட்ப மையங்களை அமைக்கும் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் கிழக்கில் செமட்ட செவண” தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் “மாணிக்க நகர்” 167 ஆவது மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில்  “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம் நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இம் மாதிரிக் கிராமத்தில் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட 25 வீடுகள் இதன்போது அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அமைச்சர் வீடுகளை பார்வையிட்டு அதனை உரிமையாளரிடம் கையளித்துடன் மூலிகை தோட்டம் ஒன்றினையும் அமைச்சர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வின்போது மாணிக்க நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டள்ள 25 வீடுகள் மற்றும் காணிதுண்டுகளுக்கான உரிமபத்திரங்கள் வழங்கப்பட்டதுடன் 115 பேருக்கு வீடமைப்பு கடனாக 863 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதுடன் 100பேருக்கு விசிரி கடன்களாக 155 இலட்சம் ரூபாவும் 70பேருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி,ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன்,வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி உட்பட தவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இந்த ஆண்டு செப்டம்பர் மாதங்களுக்குள் 2500 மாதிரிக்கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்,2020 ஜனவரி முதலாம் திகதிக்குள் 5000கிராமங்களுக்கான வீடமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் மூன்றாவது கட்டமான 10000 வீட்டுத்திட்டங்களையும் அமைத்து 2025ஆம் ஆண்டு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் செவட் செவண வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் 20000 மாதிரிக்கிராமங்கள் உருவாக்கப்படும்.

செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களில் 1880 வீட்டுத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.மிகுதி வீட்டுத்திட்டங்களும் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 300 வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல்கள் நடப்படவுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடில்லாத பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

வீடில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிககைகளை நாங்கள் எடுத்திருக்கின்றபோதிலும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையிருகின்றது.நான் செல்லும் கிராமங்களில் எல்லாம் படித்துவிட்டு தொழில்வாய்ப்பு இல்லாமல் உள்ள பெருமளவான இளைஞர் யுவதிகளை காண்கின்றோம்.நாங்கள் வீடுகளை கட்டுவது மட்டும் எமது பொறுப்பல் இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டுமானால் படித்துவிட்டு வீடுகளில் முடங்கியுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். 

இலங்கையை பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்பம் என்பது மந்தமான நிலையிலேயே காணப்படுகின்றது.இதன்காரணமாக இலங்கையில் உள்ள 332 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தகவல் தொழிநுட்ப கூடத்தினை நிறுவி அதன் ஊடாக கல்வியின் பின்னர் தொழில்வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு;ளன.

குறிப்பாக பட்டங்களை நிறைவுசெய்தன் பின்னர் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.அவர்களுக்கும் இதுவொரு சந்தர்ப்பமாக அமையும்.இதன்மூலம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுவதுடன் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையும்.

வீட்டை மட்டுமல்ல நாட்டையும் அபிவிருத்திசெய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.தொழில்நுட்ப ரீதியாக நாட்டை முன்னெற்றவேண்டிய தேவையிருக்கின்றது.வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் நாட்டினை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசெல்லமுடியும்.