கல்முனை முதல்வருக்கு எதிராக வீதியில் இறங்கிய பெரியகல்லாறு மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள் கல்முனை மாநகரசபை முதல்வர் அத்துமீறி செயற்பட்டுவருவதாகவும் அதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய பெரியகல்லாறு பிரதேச மக்கள் மற்றும் குறித்த பிரதேச பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசநாதன் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது எல்லையை உறுதிப்படுத்துங்கள்,உங்கள் கழிவுகளை எங்கள் தலையில் கொட்டாதீர்கள்,எமது குழந்தைகளை சுவாசநோய்க்கு பலியாக்காதே,பெரியகல்லாறின் சூழல் சுற்றாடலை அசுத்தம் செய்யாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

நேற்று கல்முனை மாநகரசபையினால் பெரியகல்லாறு ஊடாக குப்பை லொறிகள் கொண்டுசெல்வதை பிரதேச மக்கள் தடுத்த நிலையில் அங்குவந்த கல்முனை மாநகரசபை முதல்வருக்கும் மாநகரசபை உறுப்பினர்கள் சிலருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பகுதி கல்முனை மாநகரசபைக்குரிய பிரதேசமாகவுள்ளதாகவும் அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை மாநகர முதல்வர் விடுத்ததாகவும் ஆனால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு சொந்தமான பகுதியாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்ட பகுதிக்கு வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளை கண்டித்த அவர் தமது எல்லைக்குள் கல்முனை மாநகரசபையின் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என தெரிவித்தார்.