பெரியகல்லாறின் வரலாறு கூறும் கல்வியூர் மண்வாசனை நூலின் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்வியூர் எனப்படும் பெரியகல்லாறின் வரலாற்றினை வெளிக்கொணரும் கல்வியூர் வாசனை நூலின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

ஓய்வுநிலை அதிபரும் பிரசித்திநொத்தாரிசியுமான மூத்ததம்பி மன்மதராசாவினால் ஆய்வுசெய்யப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டது.

இதன்வெளியீட்டு நிகழ்வு பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் செயலாளர் நே.கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மலையக புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பொன்.சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா,பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் தலைவர் மா.கிருபைராஜா,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் ச.கணேசநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நூல் அறிமுகவுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரன் நிகழ்த்தியதுடன் நூல் வெளியீட்டுரையினை ஈ.பி.ஆனந்தராஜாவும் ஆசியுரையினை தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பிர்தௌஸ் சத்தார் நிகழ்த்தினார்.

இதன்போது நூல் வெளியீட்டினை தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரையினை ஓய்வுநிலை கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் சி.செல்வராசா நிகழ்த்தியதுடன் நூல்ஆய்வுரையினை கலாபூசணம் வித்தகர் எஸ்.அரசரெட்னம் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் மூத்ததம்பி மன்மதராசா சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் கிராம மக்களினால் கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட பெரியகல்லாறு மண்ணில் முதன்முறையாக வரலாற்று நூல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பெரியகல்லாறு அடைக்கலம் அமைப்பினால் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.