ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும்...




ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும்...

(மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன்)

என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும்.

 பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்ப்பது அவர்களின் நன்நடத்தைகளை வளர்க்கும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார்.

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அண்மையில்  இடம்பெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் விசேடமாக பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது மாநகரசபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மாநகர சபையினால் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் மாநகர முதல்வரின் வழிகாட்டலினூடாக மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.

அதே நேரத்தில் மாணவர்களும் கல்வியில் ஆர்வத்தைக் காட்ட வேண்டும். வெறுமனே பெற்றோர்களின் தூண்டுதலுக்காகப் படிக்காமல் ஒவ்வொன்றையும் உணர்ந்து படிக்க வேண்டும். மாணவர்களை படி படி என்று வற்றுபறுத்துவதை விட அதற்கேற்ற தண்மைகளை பெற்றோர்கள் ஒழுங்குபடுத்திக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் விடிய விடிய தொலைக்காட்சி நாடகத்தில் இருந்து கொண்டும், மதுபாவனைகளை மேற்கொண்டும் இருந்து விட்டு பிள்ளை படிக்கவில்லை என்று சொல்வது பிள்ளையின் தவறல்ல.

எனவே இவற்றை பெற்றோர்கள் தான் மாற்ற வேண்டும். அதன் பின்னர் தான் பிள்ளைகளை நாம் மாற்ற முடியும். பெற்றோர்கள் படிப்பு விடயத்தில் மாணவர்களை வற்புறுத்தினாலும் அவர்களின் நடத்தைகள் தொடர்பில் கண்காணிப்பது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தற்போது படிக்கின்ற மாணவர்கள் கைகளில் ஸ்மார்ட் போன் வந்து விட்டது. இது ஒரு விதத்தில் வளர்ச்சியாகவும், கல்விச் செயற்பாடுகளுக்கு இலகுவாகவும் இருப்பதாக இருந்தாலும் மாணவர்கள் இதனை எவ்வாறு பிரயோகிக்கின்றார்கள் என்பதிலேயே அதன் சாதக பாதக நிலைமைகள் இருக்கின்றன.

எனவே பெற்றோர்கள் இவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்மார்ட் போன் பாவணையை மாணவர்கள் மத்தியில் இருந்து குறைத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

பிள்ளைகள் நல்ல வழியில் செல்வதும், தீய வழியில் செல்வதும் பெற்றோர்களின் கைகளில் தான் கூடிய வகையில் இருக்கின்றது. கூடுதலாக பிள்ளைகளை ஆன்மீக வழியில் வளர்ப்பது அவர்களின் நன்நடத்தைகளை வளர்க்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் ஆன்மிகக் கல்வியை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு செயற்பாடுகளை அரசாங்கமும், எமது மாநகரசபையும் மேற்கொண்டு வருகின்றது. அன்றைய தினம் பிரத்தியேகக் கல்வி நிலையங்கள் நடைபெறக் கூடாது என்கின்றவாறெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஞாயிறு ஆன்மீக வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பாமல் பிரத்தியேக வகுப்பு பிள்ளைகளை அனுப்புவதில் கூடுதலாக பெற்றோர்களே முன்நிற்கின்றார்கள். பெற்றோர்கள் பொறுப்பாக இருந்தால் ஞாயிறு தின பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுவதை பெரும்பாலும் குறைக்க முடியும். ஆனால் கூடுதலான பெற்றோர்கள் அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை.

என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகக் கல்வியினூடாகவே நல்ல மனங்களையுடைய கல்விமான்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கமாக இருந்தால் இந்த உலகமே ஒழுக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.