தமிழர்களுக்குள் பிளவு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும் -கவலை கொள்ளும் அரச அதிபர்

தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளில் தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய முடியாத நிலையேற்படும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் அக்னி சிறக்குகள் சமூக சேவைகள் பேரவையின் இரண்டாவது ஆண்டு நிறைவும் கலாசார பொங்கல் பெருவிழாவும்  சிறப்பாக நடைபெற்றது.

வவுணதீவு பகுதியில் கல்வி முன்னேற்றம்,வாழ்வாதர முன்னேற்றும் உட்பட பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் அக்னி சிறக்குகள் சமூக சேவைகள் அமைப்பானது இரண்டு ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ளதை முன்னிட்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளது.

நாவற்காடு,பாரத் விளையாட்டு மைதானத்தில் அக்னி சிறக்குகள் சமூக சேவைகள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு கல்வி வலய வலய கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம்,வவுணதீவு பிரதேச செயலாளர் கே.சுதாகர்,வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,வசந்த செய்திப்பிரிவின் ஊடகவியலாளர் எம்.ஜே.எம்.சுக்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கிராமிய கலைகளை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் இதன்போது பல்வேறு துறைகளில் செயற்படும் சமூக சேவையாளர்கள்,கலைஞர்கள்,கல்வியியலாளர்கள்.சமய தலைவர்களும் அக்னி சிறகுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

இளைஞர்கள் எமது சமூகத்தினை பொறுப்பேற்கும் காலம்வருகின்றபோதுதான் எமது சமூகம் முன்னேறும்.

தமிழ் சமூகம் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளான சமூகம்.இன்று சமூக ஒற்றுமையின்மை காரணமாக,எங்களுக்குள் இருக்கும் பிளவுகள் காரணமாக,எங்களுக்குள் இருக்கும் குறுகிய நோக்கங்கள் காரணமாக பிளவுபட்டு சின்னாபின்னமாகி மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் நிலையுள்ளபோது இந்த இளைஞர்கள் இங்கு ஒன்றாக கூடியிருப்பது பாராட்டக்கூடியதாகும்.

ஒரு சமூகம் வாழவேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, கலாசர,பண்பாட்டு விழுமியங்கள்,வாழ்வியல் முறைகள்,அந்த இனத்தின் மொழி,அதன்வாழ்விடம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும்.