யானைகளில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை யானையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பல வருடங்களாக யானைகளின் தாக்குதல்களினால் உயிர்களை மட்டுமன்றி உடமைகளையும் இழந்துவந்தனர்.

அதுமட்டுமன்றி தினமும் தமது வாழ்வினை அச்சத்தின் மத்தியிலேயே நடாத்திவந்தனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தளவாய் மேய்ச்சல்தரை பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பற்றைக்காடுகளில் மறைந்திருக்கும் யானைகளினால் திக்கோடை,தும்பங்கேணி மற்றும் கொலணி பிரதேசங்கள், விவேகானந்தபுரம்,பாலையடிவட்டை,காக்காச்சிவட்டை,சின்னவத்தையென பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் யானையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை,மண்முனை தென் மேற்கு பிரதேசசபைகளின் இயந்திர ஒத்துழைப்புடன் யானைகள் அதிகளவு உள் நுழையும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யானைகள் அதிகளவில் உள்நுழையும் பகுதிகளை தூய்மைப்படுத்துவதன் ஊடாக அதனை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவும் யானை உள்நுழையும் போது வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றினை விரட்டியடிப்பதற்கு இலகுவாக அமைவதுடன் குறித்த பகுதியில் மக்கள் அச்சமின்றி போக்குவரத்துகளை செய்யக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

இந்த நடவடிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி,பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை செயலாளர், வனஜீவராசி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் சுரேஸ்,திணைக்களத்தின் போரதீவுப்பற்று பிரதேச இணைப்பாளர் ஏ.ஏ.கலீம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துந்துகொண்டனர்.