வெகுவிமர்சையாக ஆரம்பமான “மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா”

மட்டக்களப்பு மாவட்ட 2018ம் வருடத்திற்கான “மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா” மாவட்ட கலாசார பேரவை மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையுடன் இணைந்து மாவட்டச் செயலக நெறியாள்கையில் பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மிகவும் விமர்சையாக இன்று காலை நடைபெற்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இருந்து மூவினங்களின் கலாசாரங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான மாபெரும் கலாசார பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி மண்டபம் வரையில் நடைபெற்றதுடன் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு   மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் நான்கு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

இன்று காலை பண்பாட்டு பேரணியை தொடர்ந்து “இலத்திரனியலை நோக்கிய ஓர் பயணம்” என்ற தொனிப்பொருளில் மாவட்டத்தின் பாரம்பரியங்களையும், மண்ணிற்குரித்தான தன்னிறைவுச் சுவடுகளையும் பேணும் நோக்கில் இலத்திரனியல் கண்காட்சிக்கூடமொன்றும் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்நாள் முதல் அமர்வாக வித்துவான் சி.வி.கந்தையா அரங்கில் சிறப்பான முறையில் “மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பானது.

இந்த நிகழ்வில் கலைஞர்கள்,பிரதேச செயலாளர்கள் இலக்கியவாதிகள்,பிரதேச செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.