மண் அகழ்வினால் வரும் ஆபத்து –வீதியை மறித்து போராட்டம் நடாத்திய மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இராணமடு பகுதியில் உள்ள மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் குறித்த ராணமடு வீதியினை புனரமைக்குமாறு கோரியும் பிரதேச மக்களினால் இன்று (31) வீதி மறியல் போராட்டமொன்றினை நடாத்தியிருந்தனர்.

இராணமடு பிரதான வீதியை மறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த போராட்டம் நடாத்தப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீதியிலும் போராட்டம் நடாத்தப்பட்டது.

இராணமடு தொடக்கம் 25 ஆம் கொலனி வரையிலான வீதியினூடாக ராணமடு மூங்கிலாற்றுப்பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் மூங்கிலாறு ஆழமாகிச் செல்வதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ளும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக இதன்போது விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையானது இந்த மூங்கிலாறு பகுதியில் 08 இற்கு மேற்பட்ட மண்ணல் அகழ்விற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு  மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதனால் குறித்த ஆற்றுப் பகுதி  ஆழமாக செல்வதனால் வயல் மட்டத்தினை விட ஆற்றின் மட்டம் குறைந்து செல்வதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பகுதியில் வயல் செய்ய முடியாத நிலை ஏற்ப்படுமெனவும் அத்துடன் குறித்த மணல் அகழ்வினை மேற்கொண்டு ஏற்றிச் செல்வதன் காரணமாக வீதிகள் சேதமடைந்துவருவதாகவும் இதனால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் பாரிய சிரமத்தினை எதிர்நோக்க வேண்டியேற்ப்படுமெனவும் ஊடனடியாக மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்செய்கை செய்கைபண்ணமுடியாத நிலையேற்படும் எனவும் தொடர்ந்து மண் அகழ்வு செய்யப்படுமானர் வீதியும் நீரில் அடித்துச்செல்லப்படும் நிலையேற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஐந்திற்கு மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கிராம பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் புவிசரிதவியல்,கனியவளங்கள் பிரிவு மாவட்ட பொறியியலாளர் ஆகியோரை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதியில் மண் அகழ்வினை தற்காலிகமாக இடைநிறுத்திவிட்டு அது தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

மக்கள் குறித்த மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக மேலதிக அரசாங்க அதிபர்,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்,போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர். புவிசரிதவியல்,கனியவளங்கள் பிரிவு மாவட்ட பொறியியலாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அது தொடர்பான ஆய்வினை செய்து குறித்த மண் அகழ்வினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேநேரம் குறித்த மண் கொண்டுசெல்லும் வீதி பிரதேசசபைக்குரிய வீதி என்பதன் காரணமாக குறித்த வீதியூடாக மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தடைவிதிக்கவுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.