வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா நிகழ்வு

 (படுவான் நவா)

வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவெம்பா இறுதிநாள் நிகழ்வு இன்று (23)ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சாம்பசிவம் அவர்களினால்  மிகவும் பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது
மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் 'மார்கழி நோன்பு' என்றும் கன்னிப்பெண்களாலும் பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் 'பாவை நோன்பு' என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சைவகன்னியர்கள் பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே' என அழைத்து ஆற்றங்கரை சென்று, 'சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி ஆலயம் சென்று விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக' அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் 'பாவை' போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபடுகின்றனர்.