அதிகளவில் இரத்தம் தேவைப்படும் இடமாக மாறியுள்ள போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாரிய இரத்தப்பற்றாக்குறை எதிர்நோக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் திருமதி எம்.மிதுனா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தானமுகாம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்தானமுகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன்,மட்டக்களப்பு சுகாதார பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் திருமதி எம்.மிதுனா மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது நூற்றுக்காணக்கான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இரத்ததானம் செய்ததுடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

வருட இறுதி காலத்தில் நலன்புரி அமைப்பினால்; முன்னெடுக்கப்படும் சமூக செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இரத்தானமுகாம் நடாத்தப்படுவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நடைபெற்ற இரத்ததான நிகழ்வினை இடைநடுவில் இரத்தவங்கியினர் நிறுத்திவிட்டுச்சென்றதனால் அங்கு இரத்தம் வழங்க வந்தவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த இரத்ததான முகாமில் அதிகளவானோர் இரத்தம் வழங்க முன்வந்தபோதிலும் நேரமில்லையென கூறிவிட்டு அங்குவந்த இரத்த வங்கியினர் மதியத்திற்கு பின்னர் சென்றுவிட்டதாகவும் தெரியவருகின்றது.