மட்டக்களப்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்க நடவடிக்கை –உதவுமாறு கோரிக்கை

வட மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்தா,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தி,மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல்,அனர்த்தமுகாமைத்துவ நிலைய பிரதி பணிப்பாளர் றியாஸ் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசாசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள்,பொது அமைப்புகள்; ஊடாக நிவாரண பொருட்களை சேகரித்து அதனை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டுசெல்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவினை பிரதான நிவாரண சேகரிப்பு தளமாகவும் பிரதேச செயலகங்கள்,பிரதேசசபைகள் ஊடாகவும் இந்த நிவாரணங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு முடிந்தவரையில் அனைவரையும் உதவுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று தினங்கள் இந்த நிவாரண சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் சிறுவர்களுக்கான பொருட்கள்,சுகாதார ரீதியான பொருட்கள்,உலர் உணவுப்பொருட்கள்,ஆடைகள்,பால்மா பக்கட்டுகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை முடிந்தவரையில் உரியவர்களிடம் ஒப்படைக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.