பொதுத்தேர்தல் ஒன்றின் மூலமே நெருக்கடியை தீர்க்கலாம் -அறிவுரை கூறும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்

பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்படும்போதே தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்கமுடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலையும் உருவாகலாம் என்பதனால் இது முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி கௌரி தயாளகுமார் கோரிக்கை விடுத்தார்.

கம்பிரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கிரிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்று காலை மட்டக்களப்பு மாமாங்கம் மூன்றாம் குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கம்பிரலிய திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கிரிதரனிடம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கௌரி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

இதன் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே.உதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஹரிதரன் கிரி, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி கௌரி தயாளகுமார்,திருமதி சி.சுலக்ஸனா,மாமாங்க கிராம சேவையாளர்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தவராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அனைத்து தமிழ் கட்சிகளும் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு ஒன்றிணையவேண்டும் என இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் ஹரிதரன் கிரி தெரிவித்தார்.