தொலைக்காட்சிப்பெட்டியை பார்க்கும் உற்பத்தி மட்டுமே உள்ளது –பிரதேச செயலாளர் தயாபரன் கவலை

வறுமையினை இல்லாமல்செய்வது என்பது முழுமையாக அரசாங்கத்தின் கைகளில் இல்லை,அரசாங்கத்தினால் வறுமை ஒழிக்கப்படுமாக இருந்தால் இன்று இந்த நாடு முழுமையான அபிவிருத்தி அடைந்த நாடாக மாறியிருக்கும் என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் கிராம சக்தி வேலைத்திட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்கீழ் 1000 கிராமங்கள் 1000மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

700கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 300 கிராமங்கள் உற்பத்தி கிராமங்களாகவும் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திசெய்யப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெற்றது.
மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு இன்று காலை சத்துருக்கொண்டானில் நடைபெற்றது.

சத்துருக்கொண்டான் தொழில்வள நிலையத்தினை மேம்படுத்தும் வகையில் அதனை திருத்தி சிறந்த சூழலை உருவாக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன்,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிரிதரன்,திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,
இலங்கையில் வறுமையான மாவட்டமாக மட்;டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.11.3வீதமாக வறுமை நிலை காணப்படுகின்றது.நாங்கள் அந்த வறுமைக்கோட்டின்கீழிருந்து விடுபடவேண்டும்.அதற்காகவே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எதிர்காலம் தொடர்பில் உறுதிப்பாடு இல்லாமலேயே வாழ்ந்துவருகின்றோம்.அதனைப்புரிந்துகொள்ளும்போதே எவ்வாறான திட்டங்களை நாங்கள் முன்கொண்டுசெல்லவேண்டும் என்ற புரிதல் ஏற்படும்.

இன்று எமது கிராமங்களில் பிற இடங்களில் இருந்துவரும் உற்பத்திப்பொருட்களையே கொள்வனவுசெய்துகொண்டிருக்கின்றோம்.எந்த உற்பத்தியையும் நாங்கள் செய்தில்லை.தொலைக்காட்சிப்பெட்டியை பார்க்கும் உற்பத்தியை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றோம்.