“இலத்திரனியலை நோக்கிய ஓர் பயணம்” காண ஓர் அழைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2018ம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய, பண்பாட்டு விழா மாவட்ட கலாசார பேரவை மற்றும் மாவட்ட கலாசார அதிகார சபையுடன் இணைந்து மாவட்டச் செயலக நெறியாள்கையில் பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிப்பெருமையையும் அதன் சிறப்பையும் வெளிக்கொணரும் வகையில் பல்கலை அம்சங்களைத் தாங்கியதான இந்நிகழ்விலே மாவட்டத்தின் அடுத்த தலைமுறையினருக்கும், இளையசந்ததியினருக்கும் எம் விழுமியங்களை எடுத்துச் செல்லும் வகையில் ஒரு இலத்திரனியல் காட்சிக்கூடமொன்றும் இதில் அமைக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக “இலத்திரனியலை நோக்கிய ஓர் பயணம்” என்ற தொனிப்பொருளில் மாவட்டத்தின் பாரம்பரியங்களையும், மண்ணிற்குரித்தான தன்னிறைவுச் சுவடுகளையும் பேணும் நோக்கில் இந் நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு 22,23-12-2018 மட்டக்களப்பு மஞ்செந்துடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு   மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வானது நாளை (22) சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பவணி கல்லடி உப்போடை விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் பிரதான மண்டபத்தினை சென்றடையவுள்ளது.

நான்கு அரங்குகளாக நடைபெறவுள்ள இந் நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வுகள் காலை 9.00 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டு கண்காட்சி அரங்கு வி.சி.கந்தையா அரங்கிலும், பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை நாடக அரங்கானது புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கிலும் இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் நாள் நிகழ்வில் முதல் நிகழ்வான  ஆய்வரங்கானது பித்தன்ஷா அரங்கில் காலை 9..30 மணி முதல் பி.ப. 12..30 மணி வரை நடைபெறவுள்ளதுடன், பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை கலையரங்கானது வித்துவான் கமலநாதன் அரங்கிலும் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள் மற்றும் இலத்திரனியல் தொடர்பான அம்சங்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு மூத்த கலைஞர்களின் கௌரவம் என்பன இடம்பெறவுள்ளது. கௌரவமிக்க அனைத்து பிரஜைகளையும்; இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட செயலக விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.