மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி

மட்டக்களப்பு,மண்முனைபற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலர் இன்று முற்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை பிரதேசசபைக்கு முன்பாக மேற்கொண்டனர்.

மண்முனைபற்று பிரதேசசபையின் தவிசாளர் தன்னிச்சையாக செயற்பட்டுவருவதுடன் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையிருந்துவருவதாக கூறி இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று காலை விசேட கூட்டம் இருப்பதாக தமக்கு பிரதேசசபையினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பல்வேறு வேலைப்பழுவுக்கு மத்தியில் பிரதேசசபைக்கு தாங்கள் வருகைதந்தபோது குறித்த கூட்டம் பிற்போடப்பட்டதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக பிரதேசசபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிசாளர் வேலைப்பழு காரணமாக கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாவிட்டால் பிரதி தவிசாளர் குறித்த கூட்டத்தினை நடாத்தியிருக்கஅனுமதிக்காமல் குறித்த கூட்டத்தினை தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுவரையில் வரவுசெலவுத்திட்டம் தயாரிப்பதற்கான எந்த நடவடிக்கையினையும் தவிசாளர் மேற்கொள்ளவில்லையெனவும் இன்றைய கூட்டத்தின்போது அது தொடர்பில் ஆராயவிருந்த நிலையிலேயே கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தவிசாளரின் செயற்பாடுகள் காரணமாக மக்களுக்கான தேவையினை நிறைவேற்றமுடியாத நிலையிருந்துவருவதாகவும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

இதில் மண்முனைப்பற்று பிரதேசபையின் பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கத்திடம் கேட்டபோது,தவிசாளர் பதவிக்காக கடந்த காலத்தில் செயற்பட்டவர்கள் இன்று அதனை கைப்பற்றுவதற்காக இவ்வாறாக செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

பிரதேசபையின் உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே குறித்த கூட்டத்தினை பிற்போட்டதாக தெரிவித்த அவர், தான் எந்த செயற்பாட்டினை மேற்கொள்ளும்போது அனைவருடனும் கலந்தாலோசனை செய்தே மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.