தாண்டியடியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உணர்வுரீதியாக மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

பல்வேறு அச்சறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அலைஅலையாக திரண்டு மாவீரர் தினத்தினை அனுஸ்டித்தனர்.

இன்று மாலை மட்டக்களப்பு மேற்கு வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைந்துள்ள காரணத்தினால் அதற்கு அருகில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு சென்ற வவுணதீவு பொலிஸார் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டில்களை அகற்றி அங்கிருந்த கொடிகளையும் அகற்றி மாவீரர் தினம் நடாத்துவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எனினும் இன்று மாலை அங்கு சென்ற மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் உணர்வுபூர்வாக மாவீரர்தினத்தினை அனுஸ்டித்தனர்.
இதன்போது பெருமளவான மாவீரர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.