மோசமான நிலையில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர சபையின் “துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின்” கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. மாநகர சபைக்கு சொந்தமான கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான வீதிகள் மேற்படி திட்டத்தில் இணைக்கப்பட்டு, மிக விரைவாக அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத் திட்டத்தின்படி மட்டக்களப்பு கல்லடி 08ஆம் குறுக்கினையும், புளியந்தீவு மாணிக்கம் சதுக்கத்தினையும் தார் இட்டு செப்பனிடும் பணிகளும், கல்லடி மாரியம்மன் கோயில் வீதி 02 ஆம் குறுக்கு மற்றும் திருப்பெருந்துறை 07ஆம் குறுக்கு வீதிகளை கொங்கிறிட் வீதியாக செப்பனிட்டும் பணிகளும் இன்று (15.11.2018) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பல வருட காலங்களாக எவ்வித புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்ட குறித்த வீதிகளை விரைவாக புணரமைத்துத் தருமாறு பொது அமைப்புகளும், இளைஞர்களும் மாநகர முதல்வரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு ஏற்ப சபையின் சொந்த நிதியிலிருந்து மேற்படி பணிகள் இடம்பெறுகின்றன.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்ற இப்பாதைகளில், மழை காலங்களில் நீர்தேங்கி நிற்பதால், பொது மக்கள் தமது அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.