கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

சட்டவிரோதமான முறையில் உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கை


(லியோன்)

தனியாரால் சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பிடித்து உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர மேற்கொண்டு வருகின்றது.


கடந்த பல வருடங்களாக மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் நீர் வடிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடிகான்கள் மற்றும் தோணாக்களை தனியார் சிலர் அடார்த்தாகப் பிடித்து வேலையடைத்து உரிமை கோரி வந்தனர்.

இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு வழியின்றி பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் முகங்கொடுத்து வந்தனர். 

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனின் பணிப்பின் பேரில் குறித்த வடிகான்களையும், தோணாக்களையும் கையகப்படுத்தும் செயற்பாடுகளை மாநகரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக மழை நீர் வடிந்தோடும் வடிகான்களையும் தோணாக்களையும் அடைத்து உரிமைகோரியோருக்கு கடிதம் மூலம் அவற்றை மாநகர சபையிடம் ஒப்படைக்கும்படி அறிவிக்கப்பட்டும்,நோட்டிஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வந்த நிலையில் தற்போது மாநகரசபையின் அதிகாரத்தினைப் பிரோகித்து குறிப்பிட்ட அனைத்து வடிகான்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதான வடிகான்களை மாநகர சபை கையகப்படுத்தப்பட்டு  மழை காலங்களில் கல்லடி,  நாவற்குடா பிரதேசங்களில்  வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாமல்  தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .