ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூர சம்ஹாரம்

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகியது. இன்று காலை கும்பம் கரைக்கும் நிகழ்வுடன் விரதம் நிறைவுபெற்றது.

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று முருகப் பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மனுடன் போர் செய்வதற்கு வெளிவீதி சென்று சூரசம்ஹாரம் இடம்பெற்றது.

இந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளைப்பெற்றனர்.

இன்று காலை ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று ஆறு தினங்களும் பூஜிக்கப்பட்ட கும்பம் தீர்த்தக்கிணற்றில் கரைக்கப்பட்டதுடன் அடியார்கள் தங்களது விரதங்களை நிறைவுசெய்தனர்.

கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்ட ஆறு தினங்களும் ஆலயத்தில் பல்வேறு நற்சிந்தனைகள் வழங்கப்பட்டன.குறிப்பாக நடைமுறை வாழ்வில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபடுவது தொடர்பான விழிப்பூட்டல்கள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.