அம்பிட்டியவின் கதகளி மீண்டும் ஆரம்பம் - தாக்கப்பட்ட பிரதேச செயலாளர்

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று(23) மதியம் மட்டக்களப்பு ,மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதாக கூறி மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமரத்னதேரர் அப்பகுதியில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களை அங்கு நின்ற  மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் பிரதேச செயலாளரை மிக மோசமான தகாத வார்த்தைகளால் ஏசியதுடன் அவரை கன்னத்தில் அரைய முற்பட்டதுடன் அவரது சேட்டை பிடித்து அடிக்க முற்பட்ட போது அதனை அவ்விடத்தில் நின்ற பொலீசார் தடுத்துள்ளனர். குறித்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதியில் கடந்த 30 வருடங்களாக இராணுவ முகாமாக இருந்த பிரதேசம் தற்போது விடுவிக்கப்பட்டு அங்கு காணி உரிமையாளர்கள் குடியேறியுள்ள நிலையில் பொது மக்களின் குறித்த காணியில் இராணுவத்தினர் வைத்து வழிப்பட்ட சிறிய புத்த கோயில் ஒன்றும் அதன் அருகில் பெரிய அரச மரம் ஒன்றும் உள்ளது.
குறித்த அரச மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகளில் மோதி குடியிருப்போருக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில்.
பிரதேச செயலாளர் வனவள பரிபாலன சபையினரின் சட்ட ரீதியான அனுமதிகளை பெற்று காணி உரிமையாளர்கள் அரச மரத்தின் சில கிளைகளை வெட்டியுள்ளனர்.

இன் நிலையில் அரச மரத்தின் கிளைகளை சட்டரீதியாக வெட்டிய காணி உரிமையாளர்களை மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் கைது செய்யுமாறு ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்ததன் காரணமாக அவர்களை கைது செய்து பொலீசார் அடைத்துள்ளனர்.

குறித்த இடத்தில் கலகத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் அரச மரத்தை வெட்ட அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு வருமாறு வற்புறுத்திய நிலையில் அங்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் மீது அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் இவ்வாறு நடந்துள்ளார்.

இது குறித்த அங்குநின்ற பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் பிரதேச மக்கள் கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் பிரதேச செயலாளரே தனது கடமையினை செய்யமுடியாத நிலையினை பிக்குவொருவர் ஏற்படுத்தும் நிலையில் சட்டம் அதனை வேடிக்கை பார்ப்பது சட்டம் தொடர்பில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.