மட்டக்களப்பில் உளநல கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் ஆரம்பம்

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச உளநல தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு உளநல நிலையமும் வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்காவும் இணைந்து மாபெரும் கண்காட்சியையும் உளநல விழிப்பூட்டல் நிகழ்வினையும் இன்று காலை ஆரம்பித்துள்ளது.

மாறுகின்ற உலகில் இளம்பராயமும் அதன் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் இம்முறை இந்த சர்வதேச உளநல தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் இளம் பராயத்தினர் மத்தியில் உளநலத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடாத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு உளநல நிலையம் வண்ணாத்துப்பூச்சி சமாதான பூங்கா ஆகியவற்றின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சமுகசேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் உளநலத்தின் அவசியம் தொடர்பில் வீதி நாடகம் ஒன்றும் நடாத்தப்பட்டது.

அத்துடன் உளநலத்தினை பேணும் வகையில் மாணவர்கள்,இளைஞர்,யுவதிகள் மற்றும் பெரியோருக்கு சிறந்த அறிவூட்டலை வழங்கும் வகையிலான கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டதுடன் அங்கு பல்வேறு தரப்பினராலும் விழிப்பூட்டல் நடவடிககைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல பிரிவு,கிழககு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடம் என்பன தங்களது விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சியும் விழிப்பூட்டல் நிகழ்வு நாளை வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.