பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தி – விடுதலைக்கா இறைவனிடம் மன்றாடிய உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனை(பிள்ளையான்) விடுதலைசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சி.சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள்பூர்த்தியடையும் நிலையில் அவரின் விடுதலைவேண்டி இன்று வியாழக்கிழமை காலை வாவிக்கரை வீதியில் உள்ள முருகன் ஆலயத்தின் விசேட பூஜைகள் நடைபெற்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தினைஆட்சி செய்த காலப்பகுதியிலேயே மட்டக்களப்ப மாவட்டம் பாரிய அபிவிருத்தி கண்டுவந்துள்ளதாகவும் அந்த அபிவிருத்தியை தொடர்ந்து அவரால் மட்டுமே செய்யமுடியும் எனவும் வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

விசாரணை என்னும் பெயரில் தமது தலைவரை சிறையில் வைத்து இழுத்தடிப்பினை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்துவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா தெரிவித்தார்.

இன்னும் காலத்தினை இழுத்தடிக்காமல் அவரை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மக்கள் சந்திரகாந்தனின் விடுதலையினை எதிர்பார்த்து நிற்பதாகவும் அவரை உடனடியாக விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.