புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிரான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்

பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 அன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.

மேற்படி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசணத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத் தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத் திட்டம் அமையவுள்ளது.


ஏற்கனவே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர்ப்பற்றாக்குறையாக காணப்படும் இப் பகுதிகளில் இவ்வாறான ஒரு தொழிற்சாலை அமைவது இப்பகுதியில் வாழும் கிராம மக்கள் என்ற ரீதியில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றோம்.


எமது பகுதிமக்கள் குடிப்பதற்கே நீர் இல்லாமல் அல்லல்ப்படும் இவ் வேளையில் மழைநீர் மூலம் குளங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் நீர்மூலமோ அல்லது நீர்ப்பாசண திட்டம்மூலம் வளங்கப்படும் நீரையோ பயன்படுத்தி இது போன்ற தொழிற்சாலை தொழிற்படுமாயின் எமது பகுதி மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.


அது மாத்திரம் அல்லாமல் இப்பகுதி மக்கள் விவசாயத்தை தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருபவர்கள். குளத்தில் தேங்கியுள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் தண்ணீரையோ இத் தொழிற்சாலை பயன்படுத்துமாயின் எமது விவசாயிகள் பாதிப்படைவார்கள். அத்துடன் இத் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் இரசாயனக்கழிவுகள் மூலம் எமது விவசாய நிலங்கள் பாதிப்படைவதோடு சுற்றாடல்  ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டு பல வகையான நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

இத் தொழிற்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நகர்ப்புறத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இத் திட்டதிற்கு எதிராக பல கையெழுத்து வேட்டைகள் நடைபெற்றன அத்துடன் செங்கலடி சந்தியிலும் புல்லுமலைத்தொழிற்சாலைக்கு முன்னாலும் பல தரப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவ் தொழிற்சாலைக்கு எதிராக  தொடர்ச்சியாக பொதுமக்களால் பலதரப்பட்ட  முன்னெடுப்புக்கள்  நடைபெறுகின்றன.

இப் போராட்டங்களானது தமிழ் முஸ்லீம் சிங்கள  இன மக்களுக்கு ஆதரவாகவே நடைபெறுகின்றது மக்களோடு மக்களாக நின்று இந்த போராட்டங்களில் நானும் ஒருவனாக பங்கெடுக்கின்றேன் தகவலறியும் சட்டத்தின்மூலம் இத்தொழிற்சாலை தொடர்பான தகவல்களை பெற்றுள்ளேன்.

அத்துடன் 83 கிராமங்கள் 11 கிராமசேவகர் பிரிவுகள் 4500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 15500 மேற்பட்ட மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவர் இது வேடிக்கை பார்க்கும் விடயமல்ல . நாம் போராடுவது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும். இதை சிலர் இனவாதமாக சித்திரிக்கின்றனர்.

அது அவர்களின் தூர நோக்கம் அற்ற குறுகிய அரசியல் நோக்கை காட்டுகிறது . கை கட்டி வேடிக்கை பார்க்காமல் , விதண்டாவாதம் பேசாமல் அனைவரும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு அதரவு வழங்க வேண்டும்  என்பதே எனது எதிபார்ப்பு.

எமது மக்களுக்கும் வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டு வாருங்கள் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். காகித ஆலை உட்பட எத்தனையோ தொழிற்சாலைகள் வளமிழந்துகாணப்படுகின்றன.

அதை விடுத்து எத்தனோல் தொழிற்சாலையும், நீரை உறிஞ்சி போத்தலில் அடைக்கும் தொழிற்சாலையுமா மாவட்டத்தை வளப்படுத்துவது? சிந்தித்து பாருங்கள் .

ஆகவே இவ்வாறான ஒரு தொழிற்சாலை எமது பகுதியில் அமைப்பதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன். இத் தொழிற்சாலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட  அரசியல்வாதிகள்  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.