கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் நிகழ்வு-பல்கலைக்கழத்தின் எதிர்ப்பினையும் மீறி நடைபெற்றது

1990ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைகழத்தில் தஞ்சமடைந்திருந்தபோது படையினரால் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனவர்களின் 28வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து 158பேர் படையினரால் விசாரணைக்கு என அழைத்துச்செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

அதனை நினைவுகூரும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்கமும் கிழக்கு பல்கலைக்க கலைகலாசார பீட மாணவர்கள் ஒன்றியமும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் தடையினையும் மீறி மாணவர்கள் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த 158பேர் காணாமல்போயி 28 வருடங்களை கடந்துள்ள நிலையிலும் தமக்கான நீதி இதுவரையில் கிடைக்காத நிலையில்; சர்வதேச சமுகம் இலங்கை அரசாங்கம் தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

90ஆம் ஆண்டு நினைவோடு நாங்கள் இன்றும் இவ்விடத்தில்,எ  மது உறவுகள் எங்கே எமது உறவுகளை விடுதலைசெய்,இதற்கான நீதி எப்போது,போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஏந்தியிருந்தனர்.

28வருடங்களை கடந்துள்ள போதிலும் தமது உறவுகள் குறித்து உரிய பதிலை இதுவரையில் அரசாங்கம் வழங்கவில்லையெனவும் தமது நிலமைகள் தொடர்பில் எந்த கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

உறவுகளை பறிகொடுத்தவர்கள் பலர் ஏக்கத்துடனும் பல்வேறு கஸ்டங்களுடனும் வாழ்ந்துவருவதாகவும் அவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லையெனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வருடாந்தம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே தாங்கள் தமது உறவுகளை நினைவுகூறிவந்ததாகவும் ஆனால் இன்று நிர்வாகம் தங்களை அனுமதிக்காததது கவலைக்குரியது எனவும் இங்கு கவலை வெளியிடப்பட்டது.தமது உறவுகள் கடத்தப்பட்டதற்கு சாட்சியாகவுள்ள பல்கலைக்கழக உபவேந்தரே தமக்கு அங்கு நிகழ்வு நடாத்த அனுமதி வழங்காமை கவலைக்குரியது எனவும் தெரிவித்தனர்.

காணாமல்போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வழங்கவேண்டும் அதற்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

இதன்போது காணாமல்போனவர்களினை நினைவுகூரும் வகையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை கையில் ஏந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் கண்ணீர் மல்க தமது கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.