பாடுமீன்களின் சமர் - சாம்பியனானது சிசிலியா கல்லூரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பெண்கள் பாடசாலைகள் மோதும் பாடுமீன்களின் சமர் கிரிக்கட் போட்டியில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பிரபல  பாடசாலைகளான  வின்சன்ட்  உயர் தர பாடசாலை மற்றும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரிகளுக்கிடையில் சிநேக புர்வமாக எட்டாவது தடவையாக நடாத்தப்பட்டுவரும் ''பாடு மீன்களின் சமர்" என வர்ணிக்கப்படும்  கிரிக்கட் சமர் நேற்று (22) சனிக்கிழமை புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட  மென்பந்து கிரிக்கட் சமரில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வின்சன்ட் தேசிய உயர்தர பாடசாலை அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததனைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும்  இழந்து 118  ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் தேசிய உயர்தர பாடசாலை அணியினர் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து  20 ஓவர்களின் நிறைவில்  94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அதனடிப்படையில் 24 ஓட்டங்களால்  புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி அணியினர் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.   ஏலவே ஏழு தடவைகளாக நடைபெற்ற    போட்டிகளில் 3 போட்டிகளில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி அணியினரும் 4 போட்டிகளில் வின்சன்ட் உயர்தர பாட சாலை அணியினரும் வெற்றிபெற்றிருந்த நிலையில், இம் முறை புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி அணியினர் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளனர்.

8 வது தடவையாக நடைபெற்ற இச்சமரினை தம்வசப்படுத்தி  வெற்றியீட்டிய புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி  அணிக்கும் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வின்சன்ட் தேசிய உயர்தர பாடசாலை அணியினருக்குமான  வெற்றி கிண்ணங்களை நிகழ்விற்கு   பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா   வழங்கிவைத்தார்.