50வது ஆண்டில் வெபர் கிண்ணம் சுற்றுப்போட்டி

இலங்கையின் பிரபல கூடைப்பந்தாட்ட கழகங்கள் மோதும் மாபெரும் வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமானது.

50வது ஆண்டாகவும் இந்த ஆண்டு வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை மைக்கலைட் விளையாட்டுக்கழகம் மேற்கொண்டுவருகின்றது.

மைக்கலைட் விளையாட்டுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டினை பூர்த்திசெய்துள்ள நிலையில் 50வது ஆண்டாகவும் இந்த ஆண்டு வெபர் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் மைக்கலைட் விளையாட்டுக்கழக தலைவர் சட்டத்தரணி பி.என்.சுலோஜன் தலைமையில் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கை-பாகிஸ்தான் ஜேசுசபை துறவிகளின் தலைவர் அருட்தந்தை டெகஸ்டர் கிரே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா உட்பட மைக்கலைட் விளையாட்டுக்கழக முன்னாள் உறுப்பினர்கள்,இந்நாள் உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

சுற்றுப்போட்டியில் நீர்கொழும்பு,மொரட்டுவை,பொலிஸ்,விமானப்படை என இலங்கையில் பலம்வாய்ந்த எட்டு கழகங்கள் மோதுகின்றன.

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.