ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நிறைவுற்ற புனித சகாய அன்னை வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரைத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும்  ஆயித்தியமலை, தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

அன்னையின் 64 வது வருடாந்த திருவிழா  கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்குதந்தை அருட்பணி அந்தோனி டிலிமா அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.

வடக்கில் மடு திருத்தலத்திற்கு அடுத்ததாக கிழக்கில் ஆயித்தியமலை தூயசதாசகாயமாதா ஆலயம் திருத்தலமாக விளங்குகின்றது.

அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை காலை புளியந்தீவு, புனித மரியாள் பேராலயத்திலிருந்தும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்தும் காலை 5.15 மணி திருப்பலியின் பின்னர் ஆரம்பாகி ஆலயத்தினை வந்தடைந்ததும் நேற்று திருச்சொரூப பவனி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை முதலாவது திருப்பலி காலை 5.15 மணிக்கு சிங்களத்திலும் அதனைத் தொடர்ந்து திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலியானது காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில்; ஒப்புகொடுக்கப்பட்டது.

இந்த இறுதிநாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,ஜனாதிபதியின் நல்லிணக்கத்திற்கான இணைப்பு செயலாளர் டாக்டர் கோல்டன் பெர்னாண்டோ மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன் இறுதி திருப்பலி பூஜையில் கலந்துகொள்ளும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சகாயத்தாய் என்னும் ஆலய வரலாற்று நூல் வெளியிடப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஆயரினால் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அன்னையின் திருச்சொரூபம் கொண்டுவரப்பட்டு விசேட வழிபாடுகளுடன் கொடியிற்றம் சிறப்பாக நடைபெற்றது.