வாகரை பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் அபாயம் -பாராமுகமாக அரசியல்வாதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தின் வெள்ள நீர் வழிந்தோடும் பகுதி அடைக்கப்பட்டுள்ளதனால் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்களை அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளநேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழைகாலங்களில் மாங்கேணி பிரதேசத்தில் வெள்ள நிலமை ஏற்படுவதுடன் அது பிரதான வீதியூடாகவுள்ள கால்வாய் ஊடாக கடலுக்கு செல்வதனால் ஓரளவு வெள்ள நிலமை தடுக்கப்படுவதாகவும் ஆனால் கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியை சிலர் தங்களது நிலம் என அடைத்துள்ளதனால் மழை காலத்தில் பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்கொள்ளநேரிடும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பகுதிகளில் உள்ள அரச காணிகள் மாற்று இன சமூகத்திற்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளை பிரதேச செயலகத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் குறித்த நிலப்பகுதியை பாதுகாப்பதற்க தாங்கள் ஆயுதம் ஏந்திபோராடிய நிலையில் இன்று அந்த நிலங்கள் கண்முன்பாக கபளிகரம் செய்யப்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட்ட காணிகள் இன்று பணத்திற்காக மாற்று இனங்களுக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசம் தமிழர்களிடம் இருந்து பறிபோகும் நிலையேற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வராத வேறு பகுதிகளை சேர்ந்த பலர் இன்று மாங்கேணி பகுதிகளில் தமது காணிக்கு உரிமை கோரிவரும் நிலையுள்ளதாகவும் அவர்களுக்கு வாகரை பிரதேச செயலகத்தில் உள்ள காணி உத்தியோகத்தர் ஆதரவு வழங்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் காணி அபகரிப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் குறித்த பிரச்சினை தொடர்பில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

வாகரை பிரதேசத்தில் பறிபோகும் காணி தொடர்பில் கவனம் செலுத்திவருவதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.