50வது வெபர் கிண்ணத்தினை கைப்பற்றியது மொறட்டுவ அணி

50வது வெபர் கிண்ணத்தினை மொறட்டுவை அணி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான வெபர் ஞாபகார்த்த கிண்ண சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கூடைப்பந்தாட்ட துறையில் இலங்கையில் தனக்கென தனியிடத்தினைக்கொண்ட மட்டக்களப்பு மைக்கலைட் விளையாட்டு கழகம் 50வது ஆண்டாகவும் வெபர் ஞாபகார்த்த கிண்ண சுற்றுப்போட்டியினை நடாத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இந்த சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

மூன்று தினங்கள் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் நீர்கொழும்பு,மொரட்டுவை,பொலிஸ்,விமானப்படை என இலங்கையில் பலம்வாய்ந்த எட்டு கழகங்கள் பங்குகொண்டன.

இதன் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
இதன்ஆரம்ப நிகழ்வானது மைக்கலைட் விளையாட்டுக்கழக தலைவர் சட்டத்தரணி பி.என்.சுலோஜன் தலைமையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டர்.

இதில் தேசிய நல்லிணக்க,ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா உட்பட அருட்தந்தையர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்;டியில் இலங்கை விமானப்படை அணியும் மொறட்டவை அணியும் மோதிக்கொண்டனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் மொறட்டுவை அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடி 70க்கும் 41புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இந்த சுற்றுப்போட்டியின் மூன்றாவது இடத்தினை ஓல்ட் பென்ஸ் அணியினர் பெற்றுக்கொண்டதுடன் இலங்கை விமானப்படை அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக மொறட்டுவை அணியின் சுவாரிஸ் தெரிவுசெய்யப்பட்;டதுடன் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக மொறட்டுவை அணியின் டிலுக் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.

இவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசில்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.