படுவான்கரையில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகள் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படுவதாகவும் அவற்றினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் பட்டிப்பளையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட கால்பண்ணையாளர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

பொலிஸாரே படுவான்கரை மக்களின் வளங்களை சுரண்டுவதை தடைசெய்,பொலிஸாரே சட்ட விரோத மாடு கடத்தலை தடைசெய்,மாடுகள் களவாடப்படுவதை பொலிஸாரே தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யுத்ததிற்கு பின்னர் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகளை கடத்திச்செல்லும் நிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பகுதிகளில் வாகனங்களில் வருவோர் மேய்ச்சலில் உள்ள தமது மாடுகளை களவாடிச்செல்வதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றபோதிலும் பொலிஸார் போதிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் இங்கு கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினார்.

மண்முனைப்பாலம் அமைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான மாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையெடுத்து தமது கால் நடைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எஸ்.பண்டாரவிடம் கேட்டபோது,

இந்த ஆண்டு இதுவரையில் 75க்கும் மேற்பட்ட சட்ட விரோத மாடு கடத்தல்கள் தமது பொலிஸ் நிலையத்தினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக சட்ட விரோதமான நடவடிக்கைகள் பிடிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் உதவிகள் மேலும் கிடைக்குமிடத்தில் சட்ட விரோத மாடு கடத்தலை தடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.