எங்களை வேற்றுக் கண்ணோடு பார்க்க வேண்டாம்…

எங்களை வேற்றுக் கண்ணோடு பார்க்க வேண்டாம்… (மாநகரசபை உறுப்பினர் - கு.காந்தராஜா)

எமது மாநகரசபை அபிவிருத்திப் பாதையை நோக்கிச் செல்லவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சபைக்கு வந்திருக்கின்றோம்.

எனவே எங்களை வேற்றுக் கண்ணோடு பார்க்க வேண்டாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் கு.காந்தராஜா தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது அமர்வில் தனிநபர் உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சி இந்த மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத்  தேர்தலில் எவ்வித கூட்டும் இல்லாமல் போட்டியிட்டு மக்களின் கனிசமான வாக்குகளைப் பெற்றது. இந்த மாநகர சபையிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இந்த மாவட்டத்தில் அனைத்து பிரதேச சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக இருக்கின்றது .

எந்தப் பேரினவாதக் கட்சியுடனும் நாங்கள் சேர்ந்து ஆட்சி அமைக்கத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எமது கட்சி கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து எவ்வித நல்ல பதிலும் கிடைக்கவில்லை. இறுதியில் பத்திரிகைகளில் தான் பார்த்தோம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் எந்த விதத்திலும் இணைவதில்லை என்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது.

இது இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் முடிந்து விடக் கூடிய விடயம் அல்ல. எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் இதே விடயத்தைத் தான் செய்யப் போகின்றது.

 இச்சூழல் கிழக்கு மாகாணசபையில் இருக்காது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். எனவே தமிழ் தலைமைகள், தமிழ் கட்சிகள் எதிர்வருகின்ற தேர்தலை மிகவும் விழிப்பாக உற்று நோக்க வேண்டும்.

எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்கள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்திப் பணியில் பாரிய பங்கினை வகித்தவர் என்பது யாரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் அவரின் அபிவிருத்திப் பாதையைப் பலர் பின்பற்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் எமது சபைக்குள்ளும், சபைக்கு வெளியிலும் எமது கட்சித் தலைவரை விமர்சிப்பதை சில உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

எமது மாநகரசபையில் ஒத்துழைப்புடன் சமஅளவான அபிவிருத்திப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சபைக்கு வந்திருக்கின்றோம்.

எனவே எங்களை வேற்றுக் கண்ணோடு பார்க்க வேண்டாம். நாங்கள் எமது மாநகரத்தின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்பு நூறு வீதம் இருக்கும் என்று தெரிவித்தார்.