எமது ஆட்சி ஒரு தூய்மையான ஆட்சியாகவே இருக்கும்… (மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் - க.சத்தியசீலன்)


இதற்கு முன்பிருந்த ஆட்சிக் காலத்தில் நிதி வளங்கள் எவ்வாறு பெறப்பட்டது? அந்த நிதி எமது மக்களுக்கு முற்றுமுழுதாகப் பயன்பட்டதா? என்கின்ற பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் இருக்கின்றது.

அதனோடு ஒப்பிடுகையில் எமது ஆட்சி ஒரு தூய்மையான ஆட்சியாகவே இருக்கும் என மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது அமர்வில் தனிநபர் உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இந்த மாநகரசபையில் 20 வட்டாரங்களில் 17 வட்டாரங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றிருக்கின்றது. இந்த மாநகரசபையில் எமது கட்சி சார் தலைமைத்துவமாக இருக்கின்ற மாநகர முதல்வர் எந்தவொரு பிற கட்சிகளைத் தாக்கியோ அவர்களை வேறுபடுத்தியோ எவ்வித செயற்பாடுகளை மேற்கொண்டார் என்று யாரும் குறிப்பிட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துத் தமிழர்களையும் ஒன்றாக இணைப்பதற்கான ஒரு வழியிலே சென்றுகொண்டிருக்கின்றது.

கடந்த ஆட்சிக் காலங்களிலே பல துன்பியில் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. எமது வடகிழக்கிலே பல்லாயிரக் கணக்கான உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எமது மக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது.

எமது மாநகரசபை உறுப்பினர்களைப் பொருத்தவரையில் யாரும் யாரையும் அவதூறாகப் பேசுவதோ, விமர்சிப்பதோ இல்லை. இவ்வாறான குரோத எண்ணங்களை யார்மீதும் வளர்ப்பதைத் தவிர்த்து, கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது மக்களுக்கான, அவர்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எமது மாவட்டம் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகக் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது மக்கள் ஒளிமயமான வாழ்வினை வாழ வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு எமது செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இந்த மாநகரசபையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு வருட ஆட்சியானது மிகவும் சிறப்பாக இடம்பெறும் என்கின்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்றது. காரணம் இந்த சபையை நாங்கள் பொறுப்பெடுத்து நான்கு மாத காலத்திற்குள்ளே பல செயற்பாடுகள் எமது சபையினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்பிருந்த ஆட்சிக் காலத்தில் நிதி வளங்கள் எவ்வாறு பெறப்பட்டது? அந்த நிதி எமது மக்களுக்கு முற்றுமுழுதாகப் பயன்பட்டதா? என்கின்ற பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் இருக்கின்றது. அதனோடு ஒப்பிடுகையில் எமது ஆட்சி ஒரு தூய்மையான ஆட்சியாகவே இருக்கும்.

இந்த நான்கு வருட காலத்தில் மக்களின் நலன் சார்ந்த விடயங்களை எமது கட்சித் தலைமையின் வழிகாட்டலில் நாங்கள் முன்னெடுப்போம். இந்த கண்ணியமான சபைக்கு கலங்கம் ஏற்படாத வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.