கொக்கட்டிச்சோலையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கச்சென்றவர்களுக்கு அச்சுறுத்தல் - வீதியில் இறங்கிய பிரதேசசபை

மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள்,உறுப்பினர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று காலை கொக்கட்டிச்சோலையில் உள்ள பிரதேசசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடாத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் தமது கடமையினை செய்யமுடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து,அரச ஊழியர்களின் கடமையினை செய்யவிடு,பாதுகாப்பினை உறுதிப்படுத்து,நல்லாட்சியின் இலட்சனம் அரச ஊழியர்களை அச்சுறுத்துபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதா,சட்டத்தினை நடைமுறைப்படுத்துபோன்ற வாசகங்கள் பொறிக்க்ப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

கால்நடைகளினால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெருமளவான விபத்துகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கால்நடை வளர்ப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்ந்துவீதிகளில் கால்நடைகளை அலையவிடுவதாகவும் இதனால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தில் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் புஸ்பலிங்கம்,பிரதேசசiயின் செயலாளர்கள்,உத்தியோகத்தர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.