ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலய காணியை அடைக்க முற்பட்டபோது பதற்றம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியை வேலியிட முற்பட்டபோது அதற்கு உரிமைகோரியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட அரச காணியை நேற்று ஆலய பரிபாலனசபையினர் வேலியிட்டு அடைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு வந்து காத்தான்குடியை சேர்ந்த சிலர் அது தமது காணி எனவும் அதனை அடைக்கமுடியாது எனவும் தெரிவித்ததனால் அங்கு பதற்ற நிலமையேற்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு விடுத்த அழைப்பினை தொடர்ந்து பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.

இன்று இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேசபை தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி பகுதியில் உள்ள பல அரச காணிகளுக்கு போலியான முறையில் பல உறுதிகள் பெறப்பட்டுள்ளது தொடர்பில் அண்மைக்காலமாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.