செங்கலடி பொதுச்சந்தையினை புனரமைக்க அமைச்சர் மனோகணேசன் இரண்டு கோடி ஒதுக்கீடு

மட்டக்களப்பு செங்கலடி பொதுச்சந்தையினை புனரமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஊடாக இரண்டு கோடி ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் மட்டக்களப்பு வருகைதந்த தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனை செங்கலடி பொதுச்சந்தைக்கு அழைத்துச்சென்று சந்தையின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தார்.

குறித்த சந்தையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தை என்பதுடன் படுவான்கரை மற்றும் எழுவான் கரையினை இணைக்கும் மிகவும் பிரபலமான பொருளாதார மத்திய நிலையமாகவும் காணப்படுவதனால் அதனை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மனோகணேசனிடம் கோரியிருந்தார்.

குறித்த சந்தையில் ஏறாவூர் நகர்,ஏறாவூர்ப்பற்று,கிரான்,வாழைச்சேனை உட்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்து வியாபாரிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனைசெய்ய வருகைதருவதுடன் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்களும் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாகவும் குறித்த சந்தை காணப்படுகின்றது.

அத்துடன் பெருமளவான வியாபாரிகள் நிரந்தர விற்பனை நிலையத்தினையும் கொண்டிருக்கும் நிலையில் குறித்த சந்தையானது உடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும் அவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

குறித்த சந்தையினை முழுமையான புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரியதற்கு இணங்க அதற்கான நிதியொதுக்கீட்டினை செய்துள்ளதாகவும் அதற்கான திட்ட வரைபினை மேற்கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.