படுவான்கரையினை முன்னேற்றுவதன் மூலமே புலம்பெயர் மக்கள் தமது இரத்த கடனை தீர்க்கமுடியும் - நடிகர் ஜெயபாலன்

படுவான்கரையை முன்னேற்றுவிடுவதன் மூலமே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுடைய இரத்தக் கடனை தீர்க்க முடியும் என இலங்கையினை சேர்ந்தவரும் இந்தியாவில் தேசிய விருதுவென்ற நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு மாதகாலமாக மூடப்பட்டிருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள கரவெட்டியாறு விஜிதா வித்தியாத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த பாடசாலையில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை காரணமாக குறித்த பாடசாலை 02ஆம் மாதம் மூடப்பட்ட நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் உன்னிச்சை பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் கடந்த ஜுன் மாதம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பாடசாலையின் நிலமையினை அவதானித்து குறித்த பாடசாலையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் குறித்த பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனால் இரண்டு தொண்டர் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையினை பார்வையிட்டதன் பின்னர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் அங்குள்ள வீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்பிரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையினை சேர்ந்தவரும் இந்தியாவில் தேசிய விருதுவென்ற நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலனும் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கையில் உள்ள கைவிடப்பட்ட ஒரு வறிய பிரதேசமாக படுவான்கரை இருக்கின்றது. படுவான்கரையிலிருந்து வெறியேறிய மக்கள் மீள வந்து குடியேறுவதற்கான எந்த வாழ்வாதாரமும் இல்லாத காரணத்தினால் இந்த பிரதேசம் கைநழுவிச்செல்லும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இங்கு நடைபெற்ற யுத்தத்தின் அடிப்படையில்தான் புலம்பெயர் தமிழர் சமூகம் உருவானது. புலம் பெயர் தமிழர்கள் அவர்களுடைய பிள்ளைகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் அவர்களின் முன்னேற்றத்திலும் அவர்கள் உண்ணும் உணவிலும் இங்கிருப்பவர்களுடைய பிள்ளைகள் சிந்திய இரத்தம் இருக்கின்றது. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணரவேண்டும்.

படுவான்கரைக்கு வந்தபொழுது சோமாலியாவிற்கு வந்த உணர்வு ஏற்பட்டது. படுவான்கரையை முன்னேற்றுவிடுவதன் மூலமே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுடைய இரத்தக் கடனை தீர்க்க முடியும். யுத்தம் இலங்கையின் எந்தப் பகுதியில் நடைபெற்றிருந்தாலும் அதிகளவில் இரத்தம் சிந்தியது இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளாவர். புலம்பெயர் தமிழர்கள் இந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொரு கிராமங்களையும் தத்தெடுக்க வேண்டும்.

மக்கள் இல்லாமல் போதல்,இருக்கின்ற மக்கள் மீள் இங்கு திரும்பி வரமுடியாது போதல், வாழ்வதற்கு பணம் இல்லாதிருத்தல் போன்ற படுவான்கரை மக்கள் அனுபவித்துவருகின்ற துன்பங்கள் இயல்பாக வந்ததொன்றல்ல. யுத்தம் காரணமாக ஏற்பட்ட துன்பமாகும். விடுதலைக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்தினுடைய நலன்களுக்கும் சேர்த்தே இங்கிருந்தவர்கள் இரத்தம் சிந்தினார்கள். இதனை புலம் பெயர் தமிழர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உணரவேண்டும்.