ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்…

ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்…





(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்)

எல்லோரும் தலைவர்களாகி தங்கள் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமுதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம்.

ஒரே தலைமையின் கீழ், ஒரே குரலிலே இருக்கின்ற சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கடந்த கால வரலாறுகளின் பாடங்களைப் படித்துக் கொண்டு அந்தப் பாடங்களில் இருந்து அடுத்த பதிவுகளுக்குச் செல்லுவதுதான் ஒரு இனத்தினுடைய இருப்பைத் தக்க வைப்பதாக இருக்கும்.

 அவ்வாறு வருகின்ற போது தற்போது இருக்கின்ற பக்கங்களில் இருந்து கொண்டு அதற்கு முன்னைய பக்கங்களை உள்வாங்கிக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு நாங்கள் எவ்வாறு போகப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கும் வகையிலே எழுத்தாளர்கள் இருக்க வேண்டுமே தவிர முன்னைய பக்கங்களையெல்லாம் புரட்டிப் புரட்டி அதனையே வைத்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதன் மூலம் எழுபது ஆண்டுகள் காலமாக இந்த நாட்டிலே எமது இலக்குக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற எமது இனம் அதன் இருப்பை எவ்வாறு தக்க வைக்கப் போகின்றது என்பதையும் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு விடயத்தில் காட்சி, ஐயம், தெளிதல், தேறுதல் என்கின்ற நான்கு படிமுறைகள் இருக்கின்றன.

ஒரு காட்சியைப் பார்க்கின்ற போது ஐயம் வருகின்றது என்பதற்காக அவ்விடத்திலேயே நின்றால் தெளிவிற்கும் செல்ல முடியாது தேறுதலும் அடைய முடியாது.

 தற்போது பலர் அவ்வாறு தான் இருக்கின்றார்கள். காட்சியைக் காண்கிறார்கள் உடனே ஐயம் வருகின்றது அந்த ஐயத்தை தங்களுடைய இனத்தின் பிரமுகரைக் காயமாக்குவது போன்று தங்களுடைய மனப்பாங்களுக்கு ஏற்ற விதத்திலே கொட்டி விடுகின்றார்தெளிதலுக்கோ தேறுதலுக்கோ அவர்கள் செல்வது கிடையாது.

இதன் காரணமாகத் தான் 1949.12.18ம் திகதி தமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணம் செய்கின்ற போது தந்தை செல்வா அவர்கள் இந்த நாட்டில் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு தங்கள் வரலாற்றை வாழ்வித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் கூட்டாட்சிக் கட்டமைப்புக்குள்ளேயான ஒரு அரசியல் வரண்முறை இந்த நாட்டிலே ஆக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தைச் சொல்லி அதனை அடைவதற்கு வன்முறையற்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களை முன்வைத்தார்.

அந்தக் கருத்துக்களில் தெளிதலும், தேறுதலும் இல்லாமையால் நாங்கள் இன்னுமொரு பாதையிலே சென்றிருந்தோம்.

 இந்த அடைவுகள் எல்லாம், அகிம்சை, சாத்வீக முறையில் அடையப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை ஆழ்ந்து நாங்கள் சிந்தித்திருக்கின்றோமா? என்பது தொடர்பிலான கேள்விகளை நாங்கள் எங்களுக்குள் கேட்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தற்போது எமது வரலாற்றினுடைய இரு பெரிய பக்கங்களை நாங்கள் கடந்து வந்து திரும்ப நாங்கள் எந்தப் பக்கத்திற்குப் போகப் போகின்றோம் என்று நினைக்கின்ற நேரத்திலே இந்த இரண்டு களமுனைகளினுடைய அர்த்தங்களும் எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்கின்ற கேள்வியும் நமக்குள்ளே இருக்கின்றது.

நாங்கள் தெளிதலுக்கும், தேறுதலுக்கும் நாங்கள் வர வேண்டும். இரண்டு விடயங்கள் இருக்கின்றது. ஒன்று இருப்பதைப் போலவே நிகழ்வுகளை அனுசரித்துக் கொண்டு செல்வது, மற்றையது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பது.

புரட்சி, தீவிரவாதம் என்பவையெல்லாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செயற்படுபவை. எமக்குப் பலம் இருக்கின்றதா? எம்மால் அடைய முடியுமா? உலக நிலைமை அவ்வாறு இருக்கின்றதா? என்பவற்றையெல்லாம் பற்றி நாங்கள் இவ்விடத்தில் சிந்திப்போமா என்பது பற்றி தெரியாது இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உருக்கமாக இருக்கின்றோம்.

விடுதலை என்பது பல்வேறு விதமாக இருக்கின்றன. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டைக் கைப்பற்றி அந்நியர்களை வெளியே அகற்றுகின்றமை ஒரு விடுதலை,  ஆனால் இந்த பன்முகத் தண்மை கொண்ட நாட்டில் நாம் எதிர்நோக்குகின்ற விடுதலை என்பது இவ்வாறு இந்த ஆதிக்க சக்தியை முற்றுமுழுதாக இங்கிருந்து அகற்றி விடுகின்ற ஒரு விடயமா என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.

இது அவ்வாறு அகற்றி விடுகின்ற ஒரு விடயம் அல்ல. இங்கிருக்கின்ற இந்தச் சூழ்நிலைக்குள்ளே இந்த ஆதிக்க சக்தியை எந்த அளவிற்கு எங்களுடைய செயற்பாடகளுக்கு இயைந்த விதத்திலே அன்பயப்படுத்திக்கொண்டு எமது விடயத்தைக் கையாளப் போகின்றோம் என்பதில் தான் எங்களுடைய வெற்றியும், உயிர்ப்பும், இருப்பும் தங்கியிருக்கின்றது.

நம்முடைய எழுச்சி, இளமை இவை அனைத்தும் பூகம்பமாக வெடிக்கப் பார்க்கின்றன. ஆனால் இந்தப் பூகம்பக் கொதிப்பு இப்படித் தான் இருக்க வேண்டும் என்கின்ற அளவிற்கான வல்லமையை எங்களுக்குத் தந்து அதனைச் செய்விப்பதற்கான சக்தியை எமக்குத் தந்திருக்கின்றதா? அல்லது இருக்கின்ற நிலைமையை இராஜதந்திரமாகவோ, வேறுவிதமாகவோ நாங்கள் பாவித்து மாற்றானுடைய எண்ணங்களிலே எங்களுடைய விடயங்கள் தொடர்பாக சிந்திக்கின்ற செயற்பாடுகளை ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தவதற்கு நாங்கள் எவ்வுத்திக்ளைக் கையாளப் போகின்றோம் என்பதை சிந்திக்கப் போகிறோமா? என்கின்ற விடயங்ளையும் நாங்கள் ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாங்கள் எதை மதித்திருக்கின்றோம். எதை மதிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒரு பெரிய சமூகம் ஒரு தலைமைத்தவத்தின் கீழே செல்ல வேண்டும். எல்லோரும் தலைவர்களாகி எல்லோரும் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற்பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமூதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம். கற்றுத் தந்த பாடங்களாக இருக்கின்ற இந்த விடயங்களை வைத்துக் கொண்டு எமது இருப்பைத் தக்க வைப்பதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும். ஒரே தலைமையிலே ஒரே குரலிலே இருக்கின்ற ஒரு சமுதாயம் மட்டும் தான் அதன் இலக்கை நோக்கிச் செல்லும்.

இவ்விடயங்களை விமர்சனத்திற்காகச் சொல்லவில்லை இதனை வைத்தக் கொண்டு புகப்புத்தங்கள், சமுகவலைதளங்கள் மூலம் திரித்துச் சொல்லவும் முடியும். இதன் மூலம் எமது சமுதாயத்திற்கு என்ன பயன் கிடைத்திருக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டும்.

நாங்கள் சிலவற்றை நினைக்கின்றோம். அதனைக் கையாண்டுகொண்டு செல்பவருக்கு இன்னும் அதிகமான அனுபவம் இருக்கின்றது என்று நம்புகின்ற போதுதான் நாங்கள் ஒரு சமூகத்திலே அங்கத்தவராவதற்கான அடிப்படைத் தகுதியைக் கொள்கின்றோம். இல்லையென்றால், நாம் ஒவ்வொருவரும் நாங்கள் நினைத்தபடி செய்யப்படவில்லையே என்ற நினைப்பிலேயே எல்லாவற்றையும் குழைத்துக் கூழாக்கி அபாயத்தண்மைக்கு ஆளாக வேண்டிவரும் என்று தெரிவித்தார்.