தமிழ் தேசிய கூட்டமைப்பினை ;புலிகள் உருவாக்கவில்லை நாங்கள்தான் உருவாக்கினோம் - கதறும் ஆனந்தசங்கரி

தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை, நாங்களே உருவாக்கினோம் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அழிக்கப்படவேண்டும் எனவும் இதன்போது அவர் கருத்து தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாற்று நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை இன்று நண்பகல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களின் ஒற்றுமை தொடர்பில் நான் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றேன். அதனை இன்று கிழக்கு மாகாணத்தில் செய்துள்ளார்கள்.

அந்த ஒற்றுமையினை ஏற்படுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பாத நிலையே இருக்கின்றது.இன்று கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பொக்கட்டுகளில் 40இலட்சம் ரூபா பணம் இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாங்கள்தான் உருவாக்கினோம்.புலிகள் உருவாக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக நான்தான் இருந்தேன்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பே காலத்தினை இழுத்தடிக்க உதவி வருவதாகவும் அவர்கள் தமது கோரிக்கையினை சரியாக வைப்பதில்லை.முடிந்தால் தலைவர் சம்பந்தனால் அரசாங்கத்திற்கு அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு காலக்கெடுவை வழங்கட்டும்பார்க்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் நல்ல அரசியல் நிலமை ஏற்படவேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழிக்கவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பாதகமான அமைப்பாக மாறியிருக்கின்றதே தவிர அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.