போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்

அபிவிருத்தி நடவடிக்கைகளை சில குழுவினர் வேறுவேறு காரணங்களை கூறி தடுக்கமுனைவதாக போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று பகல் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி,போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுசெய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கம்பிரலிய திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை விரைவுபடுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக எதிர்நோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக குடிநீர் பிரச்சினைகள்,வீதி பிரச்சினை,யானையின் தாக்குதலினால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள்,நீர்பாசன குளங்களை புனரமைப்பு தொடர்பான விடயங்கள் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.