மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மோசடிகள் -முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி திணைக்களத்தின் 10ஆண்டுகால செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தில் ஊழல்கள் இடம்பெற்றுவருவதாக பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்தது.

இந்த நிலையில் அண்மையில் சமுர்த்தி வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடி சிக்க்pயுள்ளது.

மட்டக்களப்பு பிரதான சமுர்த்தி காரியாலயத்துக்குரிய, 57 இலட்சம் ரூபாயை களவாடிய சம்பவம் தொடர்பில், சமுர்த்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட எட்டுப் பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களால், களவாடப்பட்டு, மறைது வைக்கப்பட்டதாகக் கூறப்படும், 27 இலட்சம் ரூபாய், அதிகாரியின் வீட்டு வளாகத்திலுள்ள தென்னை மரமொன்றின் உச்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமுர்த்தி காரியாலயத்துக்கு உரித்தான 57 இலட்சம் ரூபாயை, கணக்குப் பகுதிக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர், காரியாலய கணக்காளரின் கையொப்பத்தை காசோலையில் இட்டு, நேற்று முன்தினம் மாற்றியுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்திலிருந்து செவ்வாய்க்கிழமை குறித்த அலுவலத்தின் (திணைக்களத்தின் சராசரி நிலுவையை) மீதியை பரிசோதித்து, கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குக்கான வங்கிப் பணம் பரிசோதிக்கப்பட்டது. அதில், 57 இலட்சம் ரூபாய் காணாமற் போயுள்ளது.

இவ்விடயமாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸில், கணக்காளரால் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை விரிவாக ஆராய்ந்த பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி, சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரைக் கைது செய்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மேலும் எட்டுப் பேரை, பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

பிரதான சந்தேகநபரான அந்த அதிகாரியின், சொந்தவூரான வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவட்டி கிராமத்துக்குச் சென்று சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே, தென்னை மரத்திலிருந்து 27 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் வயற்றில் அடிக்கமுற்படும் இவ்வாறானவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.