மட்டக்களப்பில் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் மூடப்பட்ட பாடசாலை – அதிர்ப்தியில் மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,கரடிவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தினை மீண்டும் திறக்குமாறு பிரதேச மக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் கரடிவெட்டியாற்றில் கடந்த 25வருடங்களாக இயங்கிவந்த பாடசாலை ஆசிரியர் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் இங்கு கல்வி கற்ற மாணவர்கள் உன்னிச்சை பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் கடமையாற்றிவந்த நிலையில் குறித்த ஆசிரியை ஓய்வுபெற்று சென்றதை தொடர்ந்து ஆசிரியர் இல்லாத காரணத்தினால் குறித்த பாடசாலையினை மூடியுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் நீண்ட தூரம் சென்று உன்னிச்சை மகா வித்தியாலயத்தில் கல்வியை பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காடுகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் இப்பிரதேச மக்கள் தமது பிள்ளைகளை தினமும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு மிகவும் அச்சத்துடனேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தினமும் கூலிவேலைகளை செய்தே தமது குடும்பத்தினைக்கொண்டுசெல்வதாகவும் இந்த நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும் சிந்திக்கவேண்டிய நிலையிருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையினை திறந்து அங்கு ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் குறித்த பாடசாலைக்கு மாணவர்களின் வரவினை அதிகரிக்கமுடியும் என தெரிவிக்கும் மக்கள் தமது பிள்ளைகள் கல்வியை தொடர்ந்து பெறவேண்டும் என்பதே தமது ஆசையெனவும் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் நீண்ட தூரம் சென்று தொடர்ந்து கல்வியைப்பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமது பாடசாலையினை மீள இயங்கச்செய்ய உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பாடசாலையின் நிலமையினை பார்வையிட்டதுடன் குறித்த பகுதி மக்களுடனும் கலந்தரையாடினார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்வி பணிப்பாளரை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பாடசாலையினை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறும் அதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.