மட்டக்களப்பு நகரில் பதிவுசெய்யப்படாத வர்த்தக நிலையங்கள் -மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல வியாபார நிலையங்கள் பதிவுசெய்யப்படாத நிலையில் செயற்பட்டுவருவதாகவும் இதன்காரணமாக மாநகரசபைக்கு பெரும் வருமானம் இழப்பு காணப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இதுவரையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 740 வர்த்தக நிலையம் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு  வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்க்கும் வழிவகைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நகர அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதிகள்கோரப்பட்டதற்கு இணங்கு அந்த அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக:கு சொந்தமான வாடிவீட்டினை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக குறித்த வாடிவீட்டுக்கான வாடகையினை அதிகரிப்பதற்கான தீர்மானம் இதன்போது நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான கிறவல்,மணல்,சிறுகல் ஆகியவற்றினை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையிலான அனுமதியை பெறுவதற்கும் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளுமாறு உறுப்பினர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட முதல்வர் குறித்த நடைமுறை தொடர்பில் ஒரு குழுவினை உருவாக்கி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தினார்.

அத்துடன் மட்டக்களப்பு பிள்ளையாரடி சந்தியில் உள்ள மீன் விற்பனை நிலையம்போன்று அப்பகுதியில் மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றையும் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைப்பதற்கான அனுமதியை சபை வழங்கியது.