மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்திக்கு 2342 மில்லியன் ரூபா –மாநகரசபை அமர்வில் மாநகர முதல்வர் தகவல்

மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்திக்கு சுமார் 2342 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகளைப்பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைப்பு ஊடாக 1650மில்லியன் ரூபாவும் அமைச்சுகள் ஊடாக ஏனைய ஒதுக்கீடுகளும் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் இந்த ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் நான்காவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள்,மாநகரசபையின் செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கான அனுமதிகள் பெறப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டதுடன் அவர்களின் முன்மொழிவுகளும் சபையில் விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வீதி அபிவிருத்தி,டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்,பூங்கா அபிவிருத்திகள்,வாராந்த சந்தைகளை அமைத்தல்,வெற்றுக்காணிகளுக்குரிய நடவடிக்கைகள்,மின் விளக்குகள் பொருத்துதல் செயற்றிட்டம் உட்பட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நூறு கிலோமீற்றர் வீதியை அமைப்பதற்கான கேள்விப்பத்திரம் பாராளுமன்றத்தினால் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் அதன்மூலம் குறைந்தது வட்டாரத்திற்கு ஆறு கிலோமீற்றர் வீதியின் புனரமைப்புபணிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.