மட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்கள் நினைவு –எதிர்ப்பு தெரிவித்த சில உறுப்பினர்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் சில உறுப்பினர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக சபை நிறைவுறும் தறுவாயில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது அமர்வின் முதலாவது விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

மாநகரசபையின் முதல்வர் தனது ஆசனத்தில் அமர்ந்து மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் கே.தவராஜாவினால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருவதற்கு மூன்று நிமிடம் வழங்குமாறு சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் வசந்தகுமார்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் சோமசுந்தரம்,சுயேட்சைக்குழு உறுப்பினர் திலீப் உட்பட சில உறுப்பினர்கள் சபை மரபுகளை மீறுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகரசபை முதல்வர் உரையாற்றிய பின்னரே இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கமுடியும் எனவும் சபை மரபுகளை மீறி இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன் காரணமாக சபை நிறைவில் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால் நினைவஞ்சலி செலுத்தலாம் என மாநகர முதல்வர் தெரிவித்ததை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இறுதியாக சபை நிறைவடையும் போது இறுதி யுத்ததின் போது உயிர்நீர்த்தவர்களை அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எதுவித எதிர்ப்புகளும் இன்றி மூன்று நிமிடம் அனைத்து உறுப்பினர்களினாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.