சிகரங்களின் சமர் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது

சிகரங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான “சிகரத்தினை நோக்கி” கிரிக்கட் சமர் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சிகரத்தினை நோக்கி பிக் மெட்ஸ் சிகரங்களின் என வர்ணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு கிரிக்கட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு போட்டியாகவும் இருந்துவருகின்றது.

இன்று காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த கிரிக்கட் போட்டி ஆரம்பமானது.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற ஏழு போட்டியில் நான்கு போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் மூன்று போட்டிகளில் மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளது.

எட்டாவது போட்டியாக இன்று நடைபெறும் இந்த போட்டியின் ஆரம்பநிகழ்வானது மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.டி.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சுகிர்தகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான மதன்,பூபால்,ரூபராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் ஆரம்பத்தில் வீரர்கள் வரவேற்கப்பட்டு உடற்பயிற்சி கண்காட்சி நடைபெற்றதுடன் வீரர்கள் அறிமுகவுடன் கிரிக்கட்போட்டி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய கல்லூரி 50ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.